மே 18 நினைவேந்தல் – நன்றியறிக்கை

வணக்கம் அட்லாண்டா வாழ் தமிழர்களே!

இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழீழ இனப்படுகொலைக்கான நாளை நினைவு கூற அட்லாண்டா வாழ் தமிழர்கள் பேரெழுச்சியாக வந்தமைக்கு அட்லாண்டா தமிழர் பேரவை முதற்கண் பெரும் வணக்கத்தை தெரிவிக்கிறது. ஓரிரு வாரங்கள் தொடர்ச்சியாக எந்த வித தொய்வும் இன்றி உழைத்த பல தன்னார்வலர்கள் இன்றி இந்த நிகழ்வை மிக சிறப்பாக நடத்தி இருக்க முடியாது.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட குறுகிய காலவெளியான இரண்டு மணிநேரத்தில் இந்த நிகழ்வை நடத்துவது சாத்தியமா என்கின்ற கேள்வி இருந்தாலும், அட்லாண்டா தமிழர் பேரவை செயல்பாட்டாளர்கள் இந்த நிகழ்வை எப்படியும் நடத்திவிட வேண்டும் என்கின்ற ஊக்கத்துடன் மிக சிறந்த நிகழ்ச்சி நிரலை வடிவமைத்துக் கொடுத்தனர்.

உள்ளரங்கில் நுழைந்தவுடன் வைக்கப்பட்ட காலவரிசைப் படியான தமிழீழ வரலாற்றை நம் ஐயன் வள்ளுவன் வழிமுறைப்படி குறுகத் தரித்த குறள் போல் எட்டு வரலாற்று தகவல் பதாகைகள் கொண்டு விவரித்தது எளிய செயல் இல்லை; அதற்கு இரவுபகல் பாராமல் உழைத்து இருக்கிறோம். எங்கள் நோக்கம் அடுத்த தலைமுறைக்கு இந்த தகவலை கொண்டு சேர்க்கவேண்டும் என்பது தான்; அது நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி.

தமிழீழத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடுகல் வடிவமைப்பும், மலர்களாலான அழகுபடுத்தலும் ஓரிரு நாளில் முடிந்த செயல் இல்லை; அதற்கு பல நாள் உழைப்பு தேவைப்பட்டது. அது சிறப்பாய் அமைந்ததில் எங்களுக்கு மட்டற்ற நிறைவு.

முகம் தெரியாத பலர் இருக்கைகளை போடுவதற்கும், எடுப்பதற்கும், சீர்படுத்துவதற்கும் முன்வந்து உதவியமைக்கு அட்லாண்டா தமிழர் பேரவை சார்பாக எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அட்லாண்டா தமிழர் பேரவையின் தமிழீழ தீர்வை நோக்கிய கருத்துரையும், ஜார்ஜியா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் (செனட்டர்) நபிலா இசுலாம் பார்க்சு அவர்கள் சிறப்புரையாற்றி, ஜார்ஜியா மாநிலத்தில் மே 18-ந் தேதியை ‘முள்ளிவாய்க்கால் நினைவு நாளாக’ அறிவிக்க வேண்டிய வரைவுத் தீர்மானத்தை வெளியிட்டமை, அட்லாண்டா தமிழர் பேரவையின் தொடர்ச்சியான செயல்பாட்டின் ஒரு சிறிய வெற்றியாக பார்க்கிறோம்.

நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நம்முடன் தோளுக்கு தோளாய் நின்ற ஜார்ஜியா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் (செனட்டர்) நபிலா இசுலாம் பார்க்சு அவர்களுக்கு, அட்லாண்டா தமிழர் பேரவை சார்பாக அவரின் மனித உரிமை செயல்பாட்டுக்காக ஒரு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

தமிழர் நாம் தவித்தது போதும், தமிழர் நாம் தனித்து இல்லை, நம் உரிமைக்குரல் உலகெங்கும் இருக்கும் அரசாங்க சபைகளில் ஒலிக்கும் அந்த செயல்பாட்டில் அட்லாண்டா தமிழர் பேரவை சிறு துரும்பு ஆகவாவது இருக்கும் என்று உறுதி கூறுகிறோம்.

நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் அட்லாண்டா தமிழர் பேரவையின் நன்றிகள் பல.

நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த தன்னார்வலர்கள்:

Abisha,
Amrithavarsini,
Karthik,
Augustine,
Indirakrishnan,
Akash,
Sharvesh,
Karthik,
Arul,
Dinesh & Team
Subhatra & Team
Micheal jalls,
Sivagurunathan
Narmatha

இவண்,
அட்லாண்டா தமிழர் பேரவை.

சமூக ஊடக தொடர்புக்கு:
Website: https://atlantathamizharperavai.org/
Facebook: https://www.facebook.com/atlantathamizharperavai/
Twitter: https://twitter.com/atlantatamilar
Instagram:https://www.instagram.com/atlantatamilarperavai/
WhatsApp: https://chat.whatsapp.com/JiUzaxGCqtLBSRug8T0KnU